Pongu Tamizh Pongu Tamizh  

பண்பாட்டு வேரிலிருந்து சமூக ஐக்கியமும் வளர்ச்சியும்

பண்பாட்டு வேரிலிருந்து சமூக ஐக்கியமும் வளர்ச்சியும்
அன்பரசன்

 

கல்லைக் கனியாக்கவல்ல உழைப்பார்வம் கொண்ட மக்கள் நாங்கள். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு குறையாத வாழ்வை இலங்கைத்தீவில் கொண்டுள்ள மக்கள் கூட்டத்தினர் நாங்கள். இந்த மண்ணுடன் திரண்ட வாழ்வும், மண்ணுடனும் மக்களுடனும் கூடிக்குலவி வளர்ந்த தொடர்ச்சியான பண்பாட்டையும் நாம் கொண்டுள்ளோம்.

மண்சுமந்த மேனியராய் இரவுடனும், பகலுடனும், வயலுடனும், குளத்துடனும், கடலுடனும், தரையுடனும் சேர்ந்து உழைத்த மக்கள் நாங்கள். மழையிலும், வெய்யிலிலும் நனைந்து இறுகிய உடம்பு எங்களுடையது. கடின உழைப்பால் உரமேறி உறுதிபெற்ற இதயம் எங்களுடையது. நெருக்கடிகளில் நசிந்து போகாத, தோல்விகளில் துவண்டு போகாத மிடுக்குமிக்க மக்கள் நாங்கள்.

அளவால் சிறிய தேசிய இனமேயாயினும் உள்ளடக்கத்தாலும், சர்வதேச முக்கியத்துவத்தாலும் பெரிய மக்கள் நாங்கள். அப்படியிருந்தும் தலைநிமிர்ந்த வாழ்வு எமக்கேன் இல்லாது போனது?

எங்களுக்குள் நாங்கள் ஐக்கியப்படத் தவறுவோமேயானால் எதிரிகளிடம் சரணடைய வேண்டி வரும். எங்கள் மத்தியில் இருக்கும் காலத்துக்கு ஒவ்வாத வேறுபாடுகளை நாம் களைந்தாக வேண்டும். ஊரென்றும், குறுச்சியென்றும், சாதியென்றும், சம்பிரதாயமென்றும் வடக்கென்றும், கிழக்கென்றும் எங்களை நாங்களே பிளபுபடுத்தி வைத்திருக்கும்போது, அந்நியர் எம் முதுகில் சவாரி செய்வது இலகுவாய் அமைகிறது.

எங்களுக்கென்று பெருமைகள் இருப்பது போலவே எங்களுக்கென்று சிறுமைகளும் இருக்கின்றன. நீண்டகால பார்வையுடனும், பரந்த சமூகக் கண்ணோட்டத்துடனும் எங்கள் குழந்தைகளை முன்னிறுத்தி, குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அத்திவாரங்களை ஆழ, அகல இடவேண்டிய பொறுப்பு எமக்குண்டு.

அறிவியலும் விஞ்ஞானமும், கலையும் கலாச்சார விழுமியங்களும், உழைப்பும் உன்னதங்களும் ஒருங்கிணைந்த சமூக நன்நோக்கு முன்னெப்பொழுதையும் விட இப்பொழுது மிக அவசியமாகிவிட்டது.

குழந்தைகளின் ஒவ்வொரு செயலிலும் சமூக இலக்கை மையமாகக் கொண்ட சிந்தனையையும், பண்பாட்டையும் வடிவமைக்க வேண்டி உள்ளது. விஞ்ஞான தொழில்நுட்பம் அளப்பெரிய சாதனைகளை நிறைவேற்றி உள்ள போதிலும் அதன் அளவுக்கு மனிதனின் அகம் சார்ந்த பண்பாட்டு வளர்ச்சிகள், நல்லெண்ணங்கள் என்பன கூடவே வளரத் தவறிய ஒரு வாழ்நிலையை இன்று நாம் விஞ்ஞான மற்றும் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் காண்கிறோம். மனிதனை முன்னிறுத்தாத எந்தொரு இயந்திர வளர்ச்சியும் வளர்ச்சியாக கொள்ளப்பட முடியாதவையாகும்.

பொருள்சார் வாழ்வும், பண்பாட்டு வாழ்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என இணைந்து வளர வேண்டும். கூடவே விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் ஏனைய அறிவியல் படைப்புகளும் மனித நேயத்தை மையமாகக் கொண்டவையாய், புதியதொரு பண்பாட்டிற்கான ஏதுக்களாய் வளரவேண்டும்.

இந்த வகையில் எம்முன் உள்ள எதிர்காலத்திற்கான பொறுப்பு மிகவும் அதிகமானது. சுதந்திரமும், சமவுரிமையும் ஒவ்வொரு மனிதனது பிறப்புரிமை மட்டுமல்ல, அவை கூடவே யுகம் கடந்து ஏனைய மனிதர்களின் நலன்களுக்கான உணர்வு கலந்த அம்சங்களாகவும் அடிமனங்களில் குடியமர வேண்டும். இதைத்தான் அறிஞர்களிடமும், கற்றறிந்த சான்றோரிடமும், பெற்றோரிடமும், பெரியோரிடமும், இளம் தலைமுறையினரிடமும் வரலாறு கோரி நிற்கின்றது.

உயர்ந்த இலட்சியத்திற்காக எதனையும் இழக்கும் சித்தம் எமது பண்பாட்டில் ஆழமாய் உள்ளது. சகோதரனுக்காக சகோதரி விரதம் இருப்பதும், சகோதரிக்காக சகோதரன் தன்னை ஒறுப்பதும் எமது பண்பாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே வேர் விட்டுள்ள ஓர் அம்சமாகும். தியாகமும் அர்ப்பணிப்பும், குடும்பப் பற்றும், பாசவுறவுகளும் எமது சமூகத்தில் பரந்து காணப்படும் முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.

இவை சமூக நன்நோக்கில் தொழிற்படும் போது இவற்றின் பெறுமானங்களும் பெறுபேறுகளும் மிகவும் உயர்ந்தவைகளாய் அமைய முடியும். இவற்றிற்கான முன் உதாரணங்களை எம் வாழ்வில் நாம் நிறையவே கண்டுள்ளோம். இவை பல பரிமாணங்களுடன் புதிய உலக சூழலுக்கு ஏற்ப மேலும் வளர்தெடுக்கப்பட வேண்டியவைகளாய் உள்ளன.

ஒரு கையில் விஞ்ஞானமும், மறு கையில் பண்பாடுமென அகமும், புறமும் இணைந்த சிறந்த வாழ்க்கை முறையை இந்த பூமியில் படைக்க வேண்டிய கட்டாயத்தின் பெயரில் நாம் உள்ளோம். தொழில்நுட்பத்தை முதலில் பெரிதும் கையில் எடுத்த மேற்குலகின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும், வெறுமைகளையும், வெற்றிடங்களையும் கண்ணால் பார்க்கும் வாய்ப்பு எமக்கு உண்டு.

ஆதலால் எங்கு தவறு நேர்ந்தது என்பதை கண்டுகொண்டு புதியதோர் பண்பாட்டை படைப்பதற்கேற்ற ஒரு முன் அனுபவத்தை வரலாறு எமக்குத் தந்துள்ளது. அந்த முன் அனுபவத்தைக் கட்டளைக் கல்லாகக் கொண்டு யுகம் கடந்த ஒரு முன் உதாரணமிக்க புதிய நாகரீகம் ஒன்றை படைக்க நாம் புறப்படவேண்டும்.

மாற்றங்களும், புரட்சிகளும் அகத்திலும், புறத்திலும் ஏற்படவேண்டும். அகத்தில் புரட்சி ஏற்படாத போது, புறத்தில் ஏற்படும் புரட்சி அர்த்;தமற்றுப் போய்விடுவது மட்டுமல்ல, எதிர்மறையானதாகவும் அமைந்துவிடுகிறது. புறத்தில் புரட்சி ஏற்படாத போது, அகத்தில் ஏற்பட்டிருக்கும் புரட்சி செயல் பூர்வமற்றதாய் போய்விடுகிறது. ஆதலால் அகமும், புறமும் இணைந்த புரட்சியும், மாற்றமுமே பண்பாட்டு வளர்ச்சிக்கான அடிப்படை விதிகளாகும்.

எங்கள் பண்பாட்டின் ஊற்றுகளை புதிய உலகத் தேவைக்கேற்ப நாம் புதிப்பித்தும், வளர்த்தும் எடுக்க வேண்டியுள்ளது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஈராயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த இலட்சிய வரிகள் இன்றைய பூகோளமய உலகிற்கு முற்றிலும் கால வழுவின்றி பொருந்துவதாக உள்ளது.

இச்சாரம்சத்தை நாம் எமது சொல்லிலும், செயலிலும், ஒட்டுமொத்த வாழ்விலும் ஒர் உயிரோட்டமாய் கலக்க வேண்டும். கூடி வாழும் நற்பண்பாடு எமது தொழில் முறையில் இருந்து எமக்கு கிடைத்தது. உதாரணமாக ஆழக் கிணற்றில் பட்டைகட்டி, துலா மிதித்து, பயிருக்கு நீர்பாச்சும் விவசாய வாழ்வில் நிகரற்ற கூட்டு வாழ்வு இருந்ததை நாம் காணலாம். துலாக்கொடி பிடிக்க ஒருவர், பட்டை சரிக்க ஒருவர், துலா மிதிக்க இருவர், துலா அடி அணைக்க ஒருவர், நீர் பாச்ச ஒருவர், வாய்க்கால் இழுக்க ஒருவர் என நீர்ப்பாச்சலில் ஒரு கூட்டுக் குடும்ப ஐக்கிய உழைப்பு இருந்த பாரம்பரியத்தைக் காணலாம்.

இத்தகைய கூட்டுத் தொழிலே கூட்டுக்குடும்ப, கூட்டுவாழ்வு ஐக்கியத்திற்கான அடிப்படையாக இருந்தது. இத்தகைய கூட்டுக்குடும்ப ஐக்கியத்தை தமிழ் மக்கள் தமது தேசிய கூட்டு வாழ்விற்கான ஐக்கியமாக பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

கூட்டுத்தொழிலுக்கான நிர்ப்பந்தம்தான் கூட்டுக் குடும்பத்திற்கான இரத்த உறவை நிர்ணயித்தது. இங்கு கூட்டுத் தொழிற் தேவையும், இரத்த உறவும், இரத்த உறவின் அடிப்படையிலான திருமண உறவும் இணைந்து பலமான கூட்டுக்குடும்ப ஐக்கியத்தையும், அதற்கான தலைமைத்துவத்தையும் கட்டி எழுப்பியது.

கூட்டுக்குடும்பத்தில் வயதால் மூத்த ஓர் ஆண் தலைமைத்துவத்தில் இருப்பார். இத்தகைய கூட்டுக் குடும்பம் என்னும் ஐக்கியக் கட்டமைப்பில் இருந்து தேசிய கட்டமைப்பை உருவாக்குவதற்கு பொருள் சார்ந்த வாழ்நிலையும், அரசியல் கோட்பாடுகளும், பண்பாட்டு அம்சங்களும் துணை புரியவேண்டும்.

கூட்டுக் கும்பத்தில் இருந்த ஐக்கிய உணர்வை கருவாகக் கொண்டு பெரிய அளவிலான தேசிய உறவுக்கு அந்த ஐக்கியத்தை வளர்தெடுக்க வேண்டும். இந்த ஐக்கியத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் எமது செழிப்பான இலக்கியங்களின் துணைகொண்டும், அறநெறிகளினதும், சமூக விழுமியங்களினதும் துணைகொண்டும் புதிய இலக்கியங்களாலும், நவீன கருத்துக்களாலும் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறன ஐக்கியத்திற்கான செயற்பாடுகளைத்தான் நாம் பண்பாட்டு அம்சங்கள் எனக் கூறுகிறோம். அதாவது புதிய ஐக்கியத்தை பழைய பொருத்தமான வேரில் இருந்து நாம் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.

பண்டைய குழு, கூட்டுக் குடும்ப சமூகத்தில் தலைமைத்துவமானது வயதால் மூத்தவருக்கு என்ற சமூக விதியினால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நவீன தேசிய சமூகத்தில் தலைமைத்துவமானது ஜனநாயகம் எனும் இழையினால் கட்டி எழுப்பப்படுவதாய் அமைந்தது. அதாவது ஜனநாயகமே ஐக்கியத்தின் திறவுகோலாகும். இத்தகைய ஜனநாயகப் பண்பாட்டினால் ஒரு சமூகம் தனது நவீன நாகரீகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும்.

விவசாயத்தில் மட்டுமன்றி மீன்பிடி, சிறு கைத்தொழில், குடிசைக் கைத்தொழில், கூலி உழைப்பு போன்ற அனைத்து தொழில்களிலும் கூட்டு வாழ்வும் இரத்த உறவும் பின்னிப்பிணைந்து இருந்ததைக் காணலாம். இது பண்பாட்டு விழாக்களிலும் கிரிகைகளிலும், சம்பிரதாயங்களிலும் விரவிக் காணப்பட்டது. சாதி அடுக்கு சமூக ஒட்டுறவுக்கு தடையாக இருந்ததென்பது வேதனை அளிக்கத்தக்க விடயம். ஆனால் நவீன வாழ்வு இதனைப் பண்பாட்டு அர்த்தத்தில் தகர்க்க வேண்டிய அவசியத்தைக் கொண்டுள்ளது.

எமது கிராமிய வாழ்வு ஐக்கியத்திற்கும் வேறுபாடுகளுக்கும் மத்தியில் சுகமான, இனிமையான அம்சங்களைக் கொண்டிருந்த அதேவேளை சுமையான, கசப்பான அம்சங்களையும் கொண்டிருந்தது. எமது பணி இதிலிருக்கின்ற நல்ல பண்பாட்டு வேர்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதிலிருந்து எதிர்கால விருட்சத்தை வளர்த்தெடுக்க வேண்டியதுதான்.

கிராமத்துள் சுருண்டிருந்த வாழ்வு ஒருகாலம். மனிதன் இப்போது உலகை வலம் வந்து செவ்வாய் வரை தனது கரங்களை நீட்டியுள்ள காலம் இது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் நாம் கிராமத்துள் சுருண்டிருந்த காலத்தில் இருந்த அடிப்படை மனித நேயங்களை, பற்றுப் பாசங்களை உலகளாவிய அனுபவத்துடன் இணைத்து, செவ்வாயையும் கடந்து அகன்ற பார்வையினால் பெருப்பிக்க வேண்டியதாகும்.

'தனி ஒருவனுக்கு உணவில்லை எனின் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்' என பாரதியார் ஒரு மனிதனை முழுப் பிரபஞ்சத்தோடும் இணைத்து பார்த்த அந்த மனிதநேயப் பண்பாட்டை புது வடிவில் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.

ஒரு மனிதனுக்கு உணவில்லாத போது இந்த உலகளாவிய முழு மக்கள் மீதும் கோபம் ஏற்பட்ட அந்த மனிதனது இதயத்தின் பரப்பளவு, பூமியின் பரப்பளவை விடவும் பெரியது. அத்தகைய பரந்த இதயங்களை படைப்பதே ஒரு சிறந்த பண்பாட்டின் பொறுப்பும், தலையாய பணியும் ஆகும்.

6/28/2010 5:18:18 AM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

சிறந்த கட்டுரை... "பொருள்சார் வாழ்வும் பண்பாட்டு வாழ்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என இணைந்து வளர வேண்டும்" அருமையான வரி
......
Bharathi, Karaikudi
 
புதினங்கள்
செய்திகள்